புதிய விமான நிலையம் அமைக்க முட்டுக்கட்டை போடவில்லை: ராமதாஸ்

திருவள்ளூர்:
 
           கிரீன் பீல்டு விமான நிலையம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடவில்லை. விவசாய நிலங்கள், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
 
                ஸ்ரீபெரும்புதூர் அருகே புதிய விமான நிலையம் அமைக்கும் பணிக்காக 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த பிரச்னை தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மீது அண்மையில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்தும் பாமக சார்பில் திருவள்ளூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
 
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியது: 
 
               "தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலம், தனியாருக்கு தொழிற்சாலை அமைக்க நிலத்தை தாரை வார்ப்பது போன்ற பிரச்னைகளில் எதிர்ப்பு தெரிவித்து அதிக அளவில் போராடியவன் நான். இதற்காக கோவை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.   விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வரும் நிலையில், இருக்கும் விவசாய நிலங்களையும் அரசே அபகரித்தால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும். 
 
            மகாராஷ்டிரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சித்தபோது மக்கள் பெருமளவில் போராடினார்கள். ஒரு ஏக்கருக்கு 15 லட்சம் வரை கொடுக்க அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தினாலும் மக்கள் அதை எதிர்த்தார்கள்.இறுதியாக அந்த நிலத்தை எடுக்கலாமா வேண்டாமா என மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதில் மக்களின் எதிர்ப்பை தெரிந்து கொண்ட அரசு அந்தத் திட்டத்தை கைவிட்டது. 
 
              அதுபோல் கிரீன்பீல்டு அமையவுள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில்  தமிழக அரசு வாக்கெடுப்பு நடத்தி முறையாக மக்களின் அனுமதி பெற்று இந்த நிலத்தை எடுக்கலாம். வளர்ச்சித் திட்டங்களை வரவேண்டாம் என கூறி நாட்டின் முன்னேற்றத்துக்கு நான் முட்டுக்கட்டை போடவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலேயே அரசியல்வாதிகளும், வெளிநாட்டு தொழிற்சாலை நிறுவனத்தினரும் வளைத்து போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விமான நிலையப் பணியை தொடங்குங்கள் எனக் கூறுகிறேன். அல்லது சென்னைக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அலமாதி பழைய விமான நிலையத்தை புதுப்பிக்கலாம் என்றார்.
 
                       கட்சியின்மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவிராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சீதாராமன் வரவேற்றார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் கோவிந்தராசு, முன்னாள் அமைச்சர் வேலு, அம்பத்தூர் நகர்மன்ற தலைவர் சேகர், கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பாலயோகி நன்றி கூறினார்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள் 

0 கருத்துகள்: