108 ஆம்புலன்ஸ் சேவை என் கனவுத் திட்டம்: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்:

              இன்று செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை என் கனவுத் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு இன்று யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

            இன்று 14 மாநிலங்களில் செயல்பட்டுவரும் 108 ஆம்புலன்ஸ் சேவை, நான் அமைச்சராக இருந்தபோது ஒரு ஆண்டுகாலம் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. இதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்திலிருந்து ஆள்களை வரவழைத்து ஆய்வுகள் நடத்தி செயல்படுத்தினோம். அதேபோல் அந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தேன். புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு சர்வதேச தரத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

              பாமக உதவி இல்லாமல் தமிழகத்தை இனி யாராலும் ஆளமுடியாது. ஒரு காலத்தில் பாமக தமிழகத்தை ஆளும். இது காலத்தின் கட்டாயம் என்றார். கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் கோ.க.மணி சிறப்புரையாற்றினார். மாநில துணைப்பொதுச் செயலர் பா. செந்தமிழ்செல்வன், எம்எல்ஏ வி.அ.த.கலிவரதன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வ.சு.வசுந்தராதேவி, மாநில துணைப்பொதுச் செயலர் எம்.அன்பழகன், மாநில துணைத் தலைவர்கள் ந.ம.கருணாநிதி, தங்க.ஜோதி, சி.அன்புமணி, மாவட்டச் செயலர்கள் ச.இ.ஏழுமலை (கிழக்கு), க.மணிமாறன் (வடக்கு), இராம.ரவி அலெக்ஸ் (நகரம்), கே.பி.பாண்டியன் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்: