அம்பத்தூர் உள்பட 9 நகரசபைகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் ;ராமதாஸ் கோரிக்கை

             அம்பத்தூர் உள்பட 9 நகரசபைகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாரணையை திரும்பப் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இது தொடர்பாக, பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

          ’’சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிப் பகுதிகளையும் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, சென்னை பெருநகர மாநகராட்சி என அறிவிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து சென்னை மாநகராட்சியின் ஒப்புதலைப் பெற இப்போது முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

              அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் அடிப்படைத் தேவைகளையும், இதர கட்டமைப்பு வசதிகளையும் நிறைவு செய்வதில் வெற்றி பெற முடியும் என்று ஒருபுறம் பேசி வருகிறோம். இன்னொரு புறம், இதற்கு மாறாக பரவலாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி மன்றங்களை கலைத்து விட்டு, சென்னை மாநகராட்சியோடு இணைத்து ஒரு அதிகார குவியலை ஏற்படுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது. இது அதிகார பரவல் என்ற அடிப்படைக் கொள்கைக்கு முரணானது.

                    சென்னை பெருநகர மாநகராட்சியோடு இணைக்கப்பட இருக்கும் பகுதிகளில் 9 நகர் மன்றத் தலைவர்களும், 200க்கு மேற்பட்ட நகராட்சி கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200-க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும், 25 ஊராட்சி மன்றத் தலைவர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் இப்போது அந்தப் பகுதிகளின் மக்களின் தேவையை உணர்ந்து நிறை வேற்றி வைப்பதில் அக்கறையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

             ஒட்டு மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணியினை இனி மாநகராட்சியுடன் இணைப்பதன் மூலம் வெறும் 93 மாநகராட்சி கவுன்சிலர்களால் நிறைவு செய்ய முடியுமா? என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே வேலைப்பளுவால் சென்னை மாநகராட்சியில் வேலைகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. வீட்டு வரி, சொத்து வரி வசூலில் என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு குளறுபடிகள் நடைபெற்று மக்கள் வட்ட அலுவலகங்களுக்கும், மண்டல அலுவலகங்களுக்கும், மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்குமாக அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டின் பிரச்சினை தீர்ப்பதற்கு பல மாதங்கள் ஆகின்றன.

             இந்த நிலையில் மாநகராட்சியை மேலும் விரிவாக்குவதால் வேலைப்பளு அதிகரிக்கும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இன்னும் காலதாமதமாகும்.தரமான சாலை வசதிகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு வசதிகளை மாநகருக்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலும் வழங்க இந்த விரிவாக்கம் அவசியமாகிறது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

                 இது உண்மையானால் தற்போதைய மாநகராட்சிப் பகுதிகளில் இந்த கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, சென்னை மாநகராட்சி இதில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது என்று அறிவிக்க முடியுமா? சென்னை மாநகரின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டோம்; இனி மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையை எப்போது அடைகிறதோ? அன்றைக்கு நகருக்கு அருகாமையில் உள்ள உள்ளாட்சிப் பகுதிகளிலும் இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாநகராட்சி பகுதியோடு இணைத்தால் அதனை வரவேற்கலாம்.

              பெருநகர தரவரிசைப் பட்டியலில் 3-வது அல்லது 4-வது இடத்தையோ சென்னை மாநகரம் பெற வேண்டும் என்பதற்காக பக்கத்தில் உள்ள பகுதிகளையெல்லாம் சேர்த்து மக்கள் தொகை கணக்கை அதிகப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது?  மக்களின் அடிப்படை வசதிகளையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று முதலிடத்தைப்பிடித்தால் அதில் தான் பெருமை இருக்கிறது.

              இத்தகைய பெருமையைப் பெற நகர விரிவாக்கம் எந்த வகையிலும் உதவாது. எனவே சென்னை மாநகரோடு அம்பத்தூர் உள்ளிட்ட 9 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிகளையும் இணைக்கும் அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும். அதற்குப் பதிலாக, ஏற்கெனவே ஆலோசனை செய்தபடி அம்பத்தூர்- சென்னை, திருவொற்றியூர் - சென்னை, தாம்பரம் - சென்னை என 3 புதிய மாநகராட்சிகளை உருவாக்கி, அவற்றில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களையும், நகராட்சிப் பகுதிகளையும் இணைத்து சென்னையோடு போட்டி போட்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

"தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை". இன்று பல லட்சம் இளைஞர்கள் படித்து, படிக்காமலும்
வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக வன்னியர்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து தனியார் துறையிலும் பார்ப்பன் , முதலியார், நாயுடு ஆதிக்கம் உள்ளது.
இதற்கு அரசு செய்ய வேண்டியது.
1 . தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரலாம். (அல்லது)
2 இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி விலக்கு அளிக்கலாம்.
3 . இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களை கவுரவித்து ஊக்கப்படுத்தலாம்.
4 . வட தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தலாம்.


இதில் பாமக வெற்றிபெற்றால் அனைத்து ஜாதி (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட) இளைஞர்களின் ஆதரவை பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும்.

dakaraidakila சொன்னது…

"தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை". இன்று பல லட்சம் இளைஞர்கள் படித்து, படிக்காமலும்
வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக வன்னியர்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து தனியார் துறையிலும் பார்ப்பன் , முதலியார், நாயுடு ஆதிக்கம் உள்ளது.
இதற்கு அரசு செய்ய வேண்டியது.
1 . தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரலாம். (அல்லது)
2 இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி விலக்கு அளிக்கலாம்.
3 . இட ஒதுக்கீடு தரும் நிறுவனங்களை கவுரவித்து ஊக்கப்படுத்தலாம்.
4 . வட தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தலாம்.


இதில் பாமக வெற்றிபெற்றால் அனைத்து ஜாதி (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட) இளைஞர்களின் ஆதரவை பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும்.