திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பா.ம.க.வினர் சிறப்பாக பணியாற்றுவார்கள்: டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை


 எங்கள் கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது: தி.மு.க. தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் கலைஞர்; 

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

 
 

சேலம்:

             சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

            தமிழகத்தில் 6-வது முறையாக முதல்-அமைச்சர் கலைஞர் மீண்டும் ஆளவேண்டும் என்று மக்களே அதைத்தான் விரும்புகின்றனர். எங்கும் இதைப்பற்றியே பேச ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு காரணம் தி.மு.க. தேர்தல் அறிக்கை தான். தேர்தல் அறிக்கையின் கதாநாயகன் முதல் அமைச்சர் கலைஞர் தான்.அவர் வெற்றி திருமகன், எல்லோரும் தேர்தல் அறிக்கை பற்றியே பேசுகிறார்கள். இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது நிறைவேற கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராக்கிட வேண்டும் என பேசிவருகிறார்கள். 234 தொகுதிகளிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

                  நமக்கு ஓட்டு சதவீதம் கூடிவருகிறது. வாக்குகளும் கூடுதலாகி வருகிறது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து தேர்தல் பணியாற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஒன்றாக கைகோர்த்து இருக்கிறது. இந்த இரண்டு கைகளையும் யாரும் பிரிக்க முடியாது. 20 ஆண்டு கனவு தற்போது நனவாகி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி வருவதால் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கிறது. சாலிடாக ஓட்டு விழுந்து விடும் என இருந்து விடக்கூடாது.

                வேட்பாளர்கள் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்க வேண்டும். இந்த வாக்காளரை 18 முறை பார்த்து விட்டேன், 20 முறை பார்த்து விட்டேன் எனக்கூறும் வகையில் வேட்பாளர்களும், கூட்டணி கட்சியினரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் மனதை மாற்ற வேண்டும்.  பெரிய கட்சி, சிறிய கட்சி என பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அசட்டையாக இருந்து விடக்கூடாது. 
 
             நாம் நிற்கும் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் 100 மடங்காக தேர்தல் பணியாற்றி உழைக்க வேண்டும் என பா.ம.க. கட்சியினருக்கு கட்டளையிட்டும் இருக்கிறேன்.பா.ம.க.வினர் சிறப்பாக பணியாற்றுவார்கள். எனக்கு நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் பேசினார். இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளரும், எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 

0 கருத்துகள்: