ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு அறிமுகக் கூட்டம்

உடையார்பாளையம்:

         தமிழக அரசியலில் முதல்வர் கருணாநிதி தீர்க்கதரிசியாகத் திகழ்கிறார் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச. ராமதாஸ்.  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தொகுதி பாமக வேட்பாளர் ஜெ. குரு அறிமுகக் கூட்டம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

 இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் ஜெ. குருவை அறிமுகம் செய்துவைத்து அவர் மேலும் பேசியது:  

                 தமிழக அரசியலில் முதல்வர் கருணாநிதி தீர்க்கதரிசியாகத் திகழ்கிறார். அரசியலில் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராதவர் கருணாநிதி.  திமுக கூட்டணியில் பிற்படுத்தப்பட்டோரின் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் காமராஜர் கட்சி உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த கட்சிகளும் உள்ளன.  

               இந்தக் கட்சிகள் அனைத்தும் சமூக நீதிக்காகத்தான் போராடி வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து, சமூக நீதிக் கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.  திமுகவிலிருந்து பாமகவை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போதுகூட, திமுகவை, பாமக தொடர்ந்து ஆதரித்து வந்தது.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் அமையும் திமுக அரசுக்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றார் ராமதாஸ்.  

              கூட்டத்துக்கு அரியலூர் மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்தார்.  திமுக இளைஞரணி மாநிலத் துணைப் பொதுச் செயலர் சுபா. சந்திரசேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பெ. திருமாவளவன், ஜயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலர் தனசேகர், நகரச் செயலர் வெ.கொ. கருணாநிதி, பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் இரா. பாலு, மாவட்டச் செயலர் க. வைத்தி, மாவட்டத் துணைச் செயலர் தர்ம. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: