திமுக தேர்தல் அறிக்கை வெற்றியை தீர்மானிக்கும்: பாமக தலைவர் ஜி.கே. மணி

           திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் வெற்றித் திருமகள் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். 

 இது குறித்து  ஞாயிற்றுக்கிழமை பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியது:

               2006-ல் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்று போற்றப்பட்டது. திமுக ஆட்சி அமைக்க இந்த தேர்தல் அறிக்கைதான் காரணமாக அமைந்தது. ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, விவசாய கடன் தள்ளுபடி என்று அனைத்து வாக்குறுதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக நிறைவேற்றியுள்ளது.  இப்படி சொன்னதை செய்ததோடு மட்டுமல்ல கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், 108 ஆம்புலன்ஸ் என்று சொல்லாததையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.  

                முதல்வர் கருணாநிதி "கதாநாயகி' என்று வர்ணித்துள்ள இந்த தேர்தல் அறிக்கையில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியத்துடன் ரூ. 4 லட்சம் கடன், கல்விக் கடனுக்கான வட்டியை அரசே ஏற்பது, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.  2006 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தேர்தல் அறிக்கை வெற்றியைத் தேடித் தரும் வெற்றித் திருமகளாகும் என்றார் ஜி.கே. மணி.

0 கருத்துகள்: