தமிழகத்தில் டிசம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு


          தமிழகத்தில் டிசம்பரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

           இதற்கான பூர்வாங்க ஆலோசனைகளை தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  இந்த சாதிவாரியான கணக்கெடுப்புடன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த விவரங்களும் தொகுக்கப்படுகின்றன.  இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதுகுறித்து ஆராய்ந்த மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. 


 ஒவ்வொரு மாநிலத்திலும்...

            இந்தக் கணக்கெடுப்பை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையும், இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகமும் இணைந்து மேற்கொள்ள உள்ளது. மாநிலங்கள் வாரியாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  சாதிவாரியான கணக்கெடுப்பு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு முறையான எந்தவொரு சாதிக் கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.  இந்த நிலையில், இப்போது சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

 தமிழக அரசு ஊழியர்களைக் கொண்டு... 

              மத்திய அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தைப் பொருத்த அளவில், களத்தில் இறங்கிப் பணியாற்ற உள்ளவர்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலை காரணமாகவே கணக்கெடுப்பு டிசம்பருக்குத் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது. 

 பூர்வாங்க ஆலோசனை: 

             சாதிவாரிக் கணக்கெடுப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் குறித்த எண்ணிக்கையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனையில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆகியன பிரதான துறைகளாக இருக்கும். கணக்கெடுப்புப் பணியின் போது இந்த அதிகாரிகளின் பணி முக்கியமாக இருக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.  அண்மையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சாதிவாரியான கணக்கெடுப்பை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: