புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைக்கலாம்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியது:-  

            தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் முதன்முறையாக இணைந்த தேர்தல் விடுதலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

             பா.ம.க.வை பொறுத்தவரை நல்ல எதிர்க்கட்சியாக செயல்படும். எதிரிகட்சியாக இருக்க மாட்டோம். அரசாங்கம் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வந்தால் எதிர்த்து போராடுவோம்.  

           கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீடு திட்டம் முழுமையும் காப்பீடு செய்யப்பட்டது. அதில் தனியார்களும், தனியார் மருத்துவமனைகளும் தான் லாபம் அடைந்தன. எங்களுடைய கருத்து அரசு மருத்துவமனைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் மருத்துவமனைகள் தரத்தை உயர்ந்து நவீனபடுத்த வேண்டும். காப்பீடும் இருக்க வேண்டும்.

            மக்களை சோம்பேறிகளாக்கும் இலவச திட்டங்கள் வேண்டாம். இலவசங்களை நிறுத்தி விடுங்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை கட்டியது. கட்டியது சரி, ஆனால் கட்டிய இடம் சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  சென்னைக்கு வெளியே 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி டவுன்ஷிப் போல் கட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு நகரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

            புதிய தலைமை செயலகத்தை வீணடித்து விடக்கூடாது. அதில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வரலாம். இதனால் லட்சக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் பயன் அடைவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

0 கருத்துகள்: