முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கேரள அரசு திமிருடனும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பது ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தெரிந்து கொண்டுதான் பேச்சு நடத்த வருமாறு தமிழக அரசுக்கு கேரளம் அழைப்பு விடுத்துள்ளது.
கேரள அரசின் இந்த வஞ்சக வலையில் தமிழக அரசு ஒருபோதும் விழுந்துவிடக் கூடாது. அவர்கள் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தினால், நாம் 125 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல நேரிடும். மேலும், தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை இழக்க நேரிடும். எனவே, புதிய அணை குறித்து பேச்சு நடத்துவதற்கான கேரள அரசின் அழைப்பை ஏற்கவே கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக