சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு குழு அமைக்க கோரி முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி பசுமைத்தாயகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே மனித சங்கிலி நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, நீண்ட சங்கிலி போல் கைகோர்த்து நின்றனர். அவர்கள் விபத்தை தடுப்போம்...உயிரை காப்போம்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய சிறிய பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
இந்த மனிதசங்கிலி விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,
பசுமைத்தாயகம் கடந்த 17 ஆண்டுகளாக பொது பிரச்சினைகளுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். குளங்களை தூர்வாரி வருகிறோம். சுற்றுச்சூழலை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறோம்.
உலகத்திலேயே அதிகளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இந்தியாவில் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகளவில் சாலை விபத்துக்கள் நடக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 15 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் தான்.
40 சதவீத சாலை விபத்துக்களுக்கு குடி போதையும் ஒரு காரணம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எனவே மது குடித்துக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீட் பெல்ட் அணிவது, ஹெல்மட் அணிவது ஆகியவற்றை கட்டாயமாக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவது போன்றவற்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.
சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு ஒரு குழு அமைக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுத இருக்கிறோம். தேவைப்பட்டால் அவரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்துவோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக