
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் செவ்வாய்க்கிழமை தமிழகமெங்கும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அரசு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்தும், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது நீதிபதிகள் கேட்ட பிரதான கேள்வி என்பது, 1931-ம் ஆண்டு கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டப்பட்ட மக்கள் தொகை குறித்த சரியான புள்ளி விவரம் எதுவும் உள்ளதா? என்பதே ஆகும். ஆக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்க, அவர்களின் எண்ணிக்கையை அறிவது மிக அவசியம். இதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பால் மக்களிடையே பிளவு ஏற்படும் என்று எதிர் பிரசாரம் செய்யப்படுகிறது. நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிவது, எவ்வாறு பிளவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. வகுப்புரிமை கேட்பது தவறு அல்ல. வகுப்பின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இல்லையெனில் அந்த வகுப்பை அவமதிப்பது போல் ஆகும் என்றார் பெரியார். எனவே, உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சி துணிந்து முடிவெடுக்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும். சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இப்பிரச்னையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சராக தான் பதவியில் இருந்த காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்ற வரலாற்று பெருமையை அவர் தட்டிச் செல்ல வேண்டும் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மத்திய முன்னாள் இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக