சாதிவாரி கணக்கெடுப்பு கோரி விழுப்புரம் மாவட்டத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:

                 சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2011-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பாமக கோரி வருகிறது. இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கோ.ப. அன்பு தலைமை தாங்கினார். மேல்மலையனூர் எம்எல்ஏ பா.செந்தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவர் தங்க.சோதி, செயற்குழு உறுப்பினர் து. வீரபத்திரபடையாட்சி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகரச் செயலர் ப.செ. திருமுருகன் நன்றி கூறினார். 

திண்டிவனம்:

                 திண்டிவனத்தில் பாமக நகரச் செயலர் மலர்சேகர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காந்தி சிலை அருகில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நகர்மன்ற உறுப்பினர்கள் முரளிதாஸ், ஜெயராஜ், வடபழநி, ராமன் மற்றும் நகர அமைப்பாளர் சௌந்தர், நகரத் தலைவர் ஒவியர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.தலைமை நிலைய செயலர் கருணாநிதி, மாவட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்

செஞ்சி:

                    செஞ்சியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்ப்ட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில்மேல்மலையனூர் எம்எல்ஏ.பா.செந்தமிழ்ச்செல்வன் பேசியது:


                    சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 300க்கும் மேற்பட்ட சாதிகள் சமூகநீதி பெற்று இன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடம்பெற  போராடியது பாமக தான். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதி மேலும் அடித்தட்டு மக்களை சென்றடையும் என்றார்.பாமக மாவட்டச் செயலர் மணிமாறன், பி.டி.எம்.அண்ணாதுரை, நெகனூர்சேட்டு, வழக்கறிஞர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருக்கோவிலூர்:

                  திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கலிவரதன், ஒன்றிய பெருந்தலைவர் செந்தில்குமார், மாநில இளைஞரணிச் செயலர் அ.பா.செழியன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட  தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கள்ளக்குறிச்சி:

               கள்ளக்குறிச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் கே.பி.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ காசாம்பு பூமாலை, முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.டி.கே.ராமு, முன்னாள் நகரச் செயலர் அபுசாலிக், ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

உளுந்தூர்பேட்டை:

                         உளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் வ.ச.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் உளுந்தூர்பேட்டை ஞா.ராஜேஷ், கோ.நேரு, திருநாவலூர் தவஞானம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலர் ம.அன்பழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

0 கருத்துகள்: