கண்டிப்பாக பா.ம.க., தனித்து போட்டி இல்லை: அன்புமணி ஆறுதல்


 

சென்னை : 

                பா.ம.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில தலைவராக மீண்டும் கோ.க.மணி, பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக அக்பர் அலி சையத், மாநில இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது

             புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். பொறுப்பின்றி இருந்தால் உங்களை விட்டு தானாக பொறுப்பு விலகி விடும். புதிய பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் ஏற்கனவே இருந்த பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் மதித்து நடக்க வேண்டும். ஆரம்பகால கட்சியினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். ஒரு தொண்டர் மனம் வருந்தினால், எனது சட்டை கிழிந்ததாக நினைக்க மாட்டேன்; என் சதை கிழிந்ததாக கருதுவேன். எந்த பந்தியில் பா.ம.க., உட்காரப் போகிறது, பந்தி நிரம்பி விட்டது என்றெல்லாம் பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்றன. பல நாட்கள் பட்டினி கிடந்தாலும் பந்திக்காக அலைய மாட்டோம். ஒரு தெருவில் குடியிருக்கும் பணக்காரர் வீட்டில் நடக்கும் ஆடம்பர திருமண பந்தியில், மானமுள்ள ஏழைத் தமிழன் பிள்ளைக் குட்டிகளோடு சென்று சாப்பிட விரும்ப மாட்டான். அவன் குழந்தைகளோடு பட்டினி கிடப்பான். தனது குழந்தைகளிடம், "நாம் மற்றவர்களுக்கு பந்தி போடும் காலம் வரும். அதுவரை பொறுமையாக இரு' என தெரிவிப்பான். அது போல நமக்கும் காலம் வரும். நாமும் பந்தி போடுவோம். இவ்வாறு ராமதாஸ் பேசினார். 

 முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசும்போது,

              "ராமதாஸ் சினிமாவில் நடித்து, கதை வசனம் எழுதி கட்சியை வளர்க்கவில்லை. தனது சொந்த உழைப்பால் கட்சியை வளர்த்தார். கூட்டணி குறித்து முடிவு செய்ய அவசரமில்லை. எதற்கும் தயாராக இருங்கள். கண்டிப்பாக தனித்து போட்டியிட மாட்டோம்,'' என்றார். சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க, மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, என்ற தமிழக அரசின் அறிவிப்பை அவசர சட்டமாக கொண்டு வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலின் போது மற்ற கட்சிகளுடன் பா.ம.க., தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்: