
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்திஸ் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வரும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசும்போது அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன் மூலம் குடிப்பழக்கத்திலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.
மது ஒழிக்கப்பட வேண்டும் என்று வள்ளுவர் காலம்தொட்டு பெரியவர்களாலும், தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. கள் உண்ணாமைக்கு தனி அதிகாரம் ஒதுக்கி "கள் உண்பவர்களை பெற்ற தாயும் வெறுப்பர்' என்று வள்ளுவர் கூறியுள்ளார். குடியும், போதையும் சாத்தானின் இரு ஆயுதங்கள் என்றார் மகாத்மா காந்தி. தமிழகத்தைப் பொருத்தவரை மதுவிலக்கு பிரசாரத்தை முன்னின்று நடத்தியவர்களில் ராஜாஜி முதன்மையானவர். மதுப்பழக்கத்தில் இருந்து மக்களை மீட்டுவிட்டால் அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடிய பெருந்தடைகள் பலவும் தகர்க்கப்பட்டு விடும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. மதுவின் தீமையை உணர்ந்து தனது சொந்த தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர் பெரியார்.
அவர் வழியில் அண்ணாவும் மதுவிலக்கை வலியுறுத்தி, இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார்.1971-ம் நிதிநிலை காரணமாக மதுவிலக்கு சட்டம் ஒத்தி வைக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து காமராஜர் போர்க்குரல் எழுப்பினார். 1974-ல் மீண்டும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டபோது, அதுவரையில் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த உணர்வு நீங்கி விட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.மதுவிலக்கை அமல்படுத்துவது கோடிக்கணக்கில் செலவிடும் இலவசத் திட்டங்களை விடவும் மேலானது.
மதுக் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு பெரிதாக தோன்றலாம். ஆனால், மதுவினால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகளைப் பார்க்கும்போது மதுவிலக்கை அமல்படுத்துவதே நல்லது என்பது தெரிய வரும். அரசின் நிதிநிலை சீரடைய வருவாயை பெருக்குவது மட்டுமே தீர்வாகாது. செலவைக் கட்டுப்படுத்துவதும் அதற்கு ஒரு வழியாகும். அரசுத் துறைகளின் செயல்திறனை மேம்படுத்தி செலவுகளைக் கட்டுப்படுத்தி நிதிநிலைமையை சீர்படுத்திவிட முடியும்.
மதுவினால் வரும் வருமானம் அரசுக்கு அவமானம் எனக்கருதி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவாகச் சென்று முதல்வரைச் சந்தித்தபோது அளித்த வாக்குறுதியிலும், இப்போது அளித்த வாக்குறுதியிலும் முதல்வர் கருணாநிதி உறுதியாக நின்று மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக