திருவள்ளூரில் ராமதாஸ் தலைமையில் 23-ல் ஆர்ப்பாட்டம்

சென்னை:

           கிரீன் பீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 23-ம் தேதி திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

               சென்னைக்கு அருகே கிரீன் பீல்டு விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கி விட்டிருக்கிறது.÷ஸ்ரீபெரும்புதூர் அருகே விவசாயத்துக்குப் பெரிதும் பயன்படாத நிலங்களும், மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து செல்லாத வகையிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.  அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாயிற்று? அந்த நிலங்கள் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுவது உண்மையா? 

                 இந்நிலையில், இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.  விளைநிலங்கள், வீடுகள், இதர உடைமைகள் பாதிக்காதவாறு கிரீன் பீல்டு விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க அரசு முன்வர வேண்டும்.   இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூரில் ஆகஸ்ட் 23-ம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்: