இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்

ஜயங்கொண்டம்:

           இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது என்றார் பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   

கூட்டத்தில்பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேலும் பேசியது:   

             கட்சிப் பொறுப்பில் உள்ள அனைவரும் கிராமங்களுக்கு  நேரடியாகச் செல்ல வேண்டும். ஆரம்ப காலத்தில் வன்னியர்  சங்கத்துக்குப் பாடுபட்ட தியாகிகளை முன்னிலைப் படுத்தி  இளைஞர்கள் உழைக்க வேண்டும்.    முன்பு கல்வி அரசின் வசமும், மது விற்பனை தனியார் வசமும் இருந்தது. ஆனால், இன்று மது விற்பனை அரசின் வசமும், கல்வி தனியார் வசமும் உள்ளது. இதனால், இளைய சமுதாயத்தின் நிலை கேள்விக் குறியாக உள்ளது என்றார் அன்புமணி ராமதாஸ்.       

பாமக மாநிலக் தலைவர் ஜி.கே. மணி பேசியது:    

           தற்போதைய ஆட்சியாளர்களால் காவிரி, பாலாறு,  முல்லைப் பெரியாறு ஆகிய ஆறுகளின் மீதுள்ள தமிழகத்தின்  உரிமை பறிபோகிறது. ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.   

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு பேசியது:

                பாமகவினர் எந்த சூழ்ச்சிக்கும் அகப்படாமல் கட்சிப் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு, எந்தத் தடுப்பணையும் கட்டப்படவில்லை அணைக்கரை- கொள்ளிடம் ஆற்றிலிருந்து பொன்னேரிக்கு வந்து கொண்டிருந்த பாசன நீர்வரத்துப் பாதை சரியாக இருந்திருந்தால், கங்கைகொண்டசோழபுரமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மூன்று போக விளைச்சலைப் பெற்றிருக்கும் என்றார் அவர்.     

                கூட்டத்துக்கு, கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்  செயலர் இரா. பாலு தலைமை வகித்தார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் வேங்கைபுலியன், திருபனந்தாள்  முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஆலயமணி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.    முன்னதாக, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர்  க. வைத்தி வரவேற்றார்.  நகரச் செயலர் ரங்கநாதன் நன்றி  கூறினார். 

Halloween Comments - http://www.halloweentext.com 

0 கருத்துகள்: