தமிழக அரசு சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ்

  சென்னை:

          தமிழக அரசு தனியாக ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

 இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

             ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தலாம் என மத்திய அமைச்சர்கள் குழுமுடிவு எடுத்துள்ளதாக செய்தி வந்தபோது அதனை வரவேற்றோம். தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்த்தால், "கணக்கெடுப்பு நடப்பது போல வெளியே தெரிய வேண்டும்; ஆனால், அது நடந்து முடிந்துவிடக் கூடாது' என்ற மறைமுகத் திட்டம் ஒளிந்திருக்கிறது என்று தெரிகிறது. 

             இதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான உயர் சாதிக்காரர்களின் மற்றுமொரு சதி என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

              இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள பொறுப்பை தட்டிக்கழிப்பது போல் உள்ளது. சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது, எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை முடிவு செய்யவே இன்னும் பல மாதங்கள் பிடிக்கும். அதோடு, இப்போது ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல், பல்நோக்கு பயன்பாட்டு அடையாள அட்டை பணிக்கான கணக்கெடுப்பில் இதைச் சேர்ந்தால் பணி முடிய 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். ஒரு ஜாதியில் எத்தனை பேர் என்பதை மட்டும் கணக்கெடுத்தால் அது போதாது. 

                  அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர், பட்டதாரிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அந்த ஜாதியில் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.  அதற்கேற்றவாறு வாய்ப்புகளையும், சலுகைகளையும் பகிர்ந்தளித்தால்தான் உண்மையான சமூகநீதியை எட்ட வழிபிறக்கும். மத்திய அரசு மேற்கொள்ளும் கணக்கெடுப்பில் இவை சாத்தியமில்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 

              மாநில மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக அவர்கள் இருந்தால் அதனை தகுந்த ஆதாரத்துடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு மாநிலத்தின் இடஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்யும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாகவே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. தமிழகத்தில் தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். 

                அப்போதுதான் உச்ச நீதிமன்றம் அளித்த வாய்ப்பை பயன்படித்திக்கொள்ள முடியும். தனியாகக் கணக்கெடுப்பு நடத்த |400 கோடி செலவாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு |60 ஆயிரம் கோடி பட்ஜெட் தயாரிக்கும் மாநில அரசுக்கு இது கடினமான காரியம் அல்ல. பெரும்பான்மையான மக்களின் நலன் கருதி இந்தக் கணக்கெடுப்பை நடத்தலாம்.

1 கருத்துகள்:

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

சமூக அந்தஸ்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு, இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்குகள் வரும் போதெல்லாம் அந்தப் பிரிவினர் மக்கள் தொகையில் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று நீதி மன்றங்கள் கேட்கின்றன. ஆனால் அப்படிக் கேட்கிற ஒரு நீதிபதிக்குக் கூட சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடத் தோன்றவில்லை என்பது வேதனையான ஒன்று.

சாதியையும் சாதி ஆதிக்கத்தையும் ஒழிக்க முடியாத, ஒழிக்க விரும்பாத சக்திகள் சாதிக் கணக்கெடுப்பை மட்டும் ஒழிக்க வேண்டும் என்று கோருவதன் சூட்சுமம் என்னவென்று தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று கோருவது சாதியைக் காப்பாற்றுவதற்காக அன்று; மாறாக சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை சாதியின் பெயரால்தான் பெற முடியும் என்பதாலேயே. நாட்டின் விடுதலைக்கு முன்னர் வரை, மிருகங்களுக்குக் கொடுக்கும் உரிமையினைக் கூட கொடுக்காமல் பிறப்பின் அடிப்படையில் எடுபிடிகளாக மாற்றி வைக்கப்பட்டிருந்த சாதியினர், ஒருநாளும் நாட்டின் உயர் அதிகாரங்களில் வந்தடைந்து விடக்கூடாது என்ற நோக்கில், பரம்பரை பரம்பரையாக நாட்டின் உயர் அதிகாரங்களை ஆண்டு அனுபவித்து வரும் உயர் சாதியினர் முன் வைக்கும் எத்தகைய சொத்தை காரணங்களுக்கும் மசிந்து விடாமலும் விலையற்ற எதிர்ப்புகளுக்கு அஞ்சாமலும் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்.