
சேலம்:
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்துவதில் முதல்வர் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்துக்கு வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை கூறியது:
தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்வர் கூறியிருந்தார். ஆனால் இது குறித்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு, மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத்தானே சொன்னேன், இத்தனை நாள்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது மக்களை ஏமாற்றும் செயலாகும். டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவித்ததை அடுத்து அவர்களை மிரட்டுவதற்கான ஆயுதமாகத்தான் மதுவிலக்கு பற்றி பேசியுள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே வீதி தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு தாராளமாக விற்பனை நடைபெற்று வரும் நிலையில் இப்போது புதிய மது ஆலைகளுக்கும் அனுமதி அளித்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது 13 வயது சிறுவர்கள் கூட மது அருந்துகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் மது அருந்தாத இளைஞர்களே இல்லை என்ற நிலைமை வந்து விடும்.
தமிழகத்தில் 1971-க்கு பிறகு உருவான தலைமுறை, மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டது. இனி வரும் தலைமுறையாவது இந்தப் பழக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும். ஒரு ஏழை மது குடிப்பதால் அந்தக் குடும்பத்தையே அவர் நிர்மூலமாக்குகிறார். தமிழகத்தில் பல குடும்பங்கள் மதுவால் சீரழிந்துள்ளது. இந்தக் கொடுமையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் முதல்வர் கருணாநிதிக்கு மதுவிலக்கு கொண்டு வருவதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
சாதிவாரிக் கணக்கெடுப்பு:
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக முதல்வர் தட்டிக் கழித்துள்ளார். ஆனால் புதுவையில் நவம்பருக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்போவதாக அந்த மாநில முதல்வர் யாரும் கோரிக்கை விடாமலேயே அறிவித்துள்ளார். தமிழக முதல்வரே ரூ.400 கோடி செலவாகும், அதை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்கு ரூ.400 கோடி அல்ல ரூ.4 ஆயிரம் கோடியே ஆனாலும் அதை தமிழக அரசுதான் செலவிட வேண்டும்.
இதை நான் கூறுகிறேன் என்பதற்காக செய்யாமல் உச்ச நீதிமன்றம் கூறுவதற்காக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பெரிய ஆபத்து நேரிடும். சாதி வாரி கணக்கெடுப்பை பாமக மட்டுமல்லாமல் பாஜக, அதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரித்துப் பேசியுள்ளன. தமிழக அரசின் மெத்தனத்தால் ஒரு இனமே அழிக்கப்பட்டுவிட்டது.
ஈழத் தமிழர்களுக்காக பாடுபட்டு தனி அரசாங்கத்தையே நடத்திய ஒரு இயக்கம் அழிக்கப்படுவதற்கு நாம் காரணமாக இருந்துள்ளோம். இதேபோல் காவிரியில் உரிமையை இழந்ததற்கு இதுவரை தொடர்ந்த தமிழக அரசுகளே காரணம். ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும் 200 டி.எம்.சி. தண்ணீரை சேமிப்பதற்கு திட்டங்கள் செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தியும் அதை கொள்கை அளவில் கூட அரசு ஏற்கவில்லை. தமிழக அளவில் நதிகளை இணைக்கும் திட்டத்தில் காவிரியையும் வைகையையும் இணைப்பதாகக் கூறி வருகின்றனர். ஆனால் முதலில் காவிரியை பாலாற்றுடன் இணைக்க வேண்டும்.
வைகையை தாமிரபரணியுடன் இணைக்க வேண்டும். தனது தலைமையிலான கூட்டணிக்கு மற்றவர்கள் வர வேண்டும் என்று ஆளுக்கு ஆள் கூறி வருகின்றனர். தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றால் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி ஏற்பட்டு ஆட்சி அமைய வேண்டும்.மாற்றுக் கட்சியினரை தமது கட்சியில் சேர்க்கும் நிகழ்வைத் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். மாற்றுக் கட்சியில் இருந்து சேலத்தை சேர்ந்த ஒருவரை தனது கட்சியில் சேர்த்து பதவியையும் வழங்கியுள்ளது திமுக. இப்போது அவர் மீது உள்ள வழக்குகள் நிலுவையிலேயே உள்ளன.
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டி செப். 18-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட பாமக முடிவு செய்துள்ளது என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக