
பரமக்குடி :
""தி.மு.க., ஆட்சியின் குறைகளை மூன்று ஆண்டுகளாக சுட்டிக் காட்டியதால், கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டோம்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வந்த அவர் கூறியதாவது: இட ஒதுக்கீடு அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியலில் உரிய பங்கு வேண்டும் என கேட்கும் காலம் வந்துவிட்டது. அனைவரும் அரசியலில் அங்கீகாரம் வேண்டுமென கேட்கின்றனர். உயர் பதவிகளில் இவர்கள் தான் வர வேண்டும் என்ற அதிகாரத்தை நீக்கி, பெரிய, சிறிய சமுதாயத்திற்கும் கட்சியில் உரிய பங்கு அளித்துள்ளோம். மாவட்டம் வாரியாக பொதுச் செயலர் உள்ளிட்ட பதவிகளை பல்வேறு இனத்தவருக்கும் வழங்கி வருகிறோம்.
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கடலில் வீணாகிறது. இதை தடுக்கும் நோக்கில், ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பு அணையை அமைத்து நீரை தேக்கி வைக்க வேண்டும். பூரண மது விலக்கு வேண்டுமென 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதை அமல்படுத்தாத பட்சத்தில், 13 வயது முதல் உள்ள அனைத்து இளைஞர்களும் அடுத்த ஐந்தாண்டுகளில் கெட்டு விட வாய்ப்புள்ளது. விவசாயத்தைப் பற்றி சிந்திக்காத நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் அரிசி உள்ளிட்ட விளைபொருட்களை வெளியில் இருந்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
நாளை மறுநாள் (ஆக., 10) 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து, சென்னையில் ஆலோசனை நடத்தி இது தொடர்பான போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளோம். மூன்று ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக