
செஞ்சி :
""வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தேவையில்லை. மிகப்பெரிய சமூகமான வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்தால்தான் சமூகம் முன்னேறும்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:
பா.ம.க.,விற்கு போராட்டம் புதிதல்ல. 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், நம்மை போராட்டம் விட்டபாடில்லை. எல்லா சமூகத்திற்கும் உரிய பங்கை பெற்றுத் தந்த நமக்கு, இன்னும் உரிய பங்கு கிடைக்கவில்லை. 69 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீட்டை உயர்த்தக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டனர். தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை முடிவு செய்து கொள்ளலாம் என்ற நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் ஒதுக்கீட்டால் உயர் கல்வியில் உரிய பங்கு கிடைத்துள்ளது. இதற்காக 15 ஆண்டுகள் போராடினோம். இப்போது கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளாக போராடி 108 ஜாதிக்கு கிடைத்த 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு 9 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கிடைக்கவில்லை. இது அநீதியிலும் அநீதி.
மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று சொல்லும் கட்சி தமிழகத்தில் இல்லை. வன்னியர்களின் வளர்ச்சி, மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை. தாழ்த்தப்பட்டவர்களை விட பின்தங்கியவர்களாக உள்ளனர் என்று சொல்ல ஒரு தலைவரும் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 41 சதவீதம் குடிசைகள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டவர்களை விட வன்னியர்கள் தான் அதிகம். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தேவையில்லை. மிகப்பெரிய சமூகமான வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கொடுத்தால்தான் சமூகம் முன்னேறும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக