
சென்னை:
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது காவல் துறை தொடர்ந்துள்ள வழக்குகள் பழிவாங்கும் நடவடிக்கை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு ஜூலை 28-ல் தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய குரு, ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடியதையும், அதனால் அவர்கள் தனி இட ஒதுக்கீடு பெற்றதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஆனால், வன்னியர் மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடும் வகையில் பேசினார் எனக் கூறி, 4 வெவ்வேறு பிரிவுகளில் குருவின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குருவை கூலிப்படை மூலம் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், காவல் துறைதான் பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல் குறித்து நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் முடிவெடுப்பதற்கான அதிகாரம் கடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகக் குழுவும் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணியா?
கூட்டத்துக்குப் பின் ராமதாஸ் கூறியதாவது:
குரு மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இதை நாங்கள் பழிவாங்கும் நடவடிக்கை என்றே கருதுகிறோம். குரு மீதான வழக்குகள் காரணமாக தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பாதிக்குமா என்பது பற்றியெல்லாம் எங்கள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம்.
இங்கு யாரும் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு மாற்று அணி அமைய வேண்டும் என்பது அந்தக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் பலரது கருத்தாக உள்ளது. அதைத்தான் நான் அண்மையில் மதுரையில் குறிப்பிட்டேன். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் உயிர் மூச்சான கொள்கை.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் கருணாநிதி இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ஆவலாக எதிர்பார்க்கிறோம். டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கிறது. அவர்களை அரசு பழிவாங்காமல், அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக