
சென்னை:
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவின் விவசாய அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விவசாய சங்கங்களின் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நல்லுசாமி, வேட்டவலம் மணிகண்டன், வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைத்து டாக்டர் ராமதாஸ் பேசியது:
தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களை வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தவர்களும் வாங்குவதைத் தடுக்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே விளை நிலங்களை வாங்க வேண்டும். நிலத்தை வாங்கிவிட்டு ஓராண்டு வரை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் வாங்கியவரிடமே நிலத்தை ஒப்படைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தில் விவசாயப் பணிகளையும் இணைக்க வேண்டும். அல்லது விவசாயப் பணிகள் இல்லாத மாதங்களில் அதனை செயல்படுத்த வேண்டும்.பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 25 வழங்க வேண்டும். நுகர்வோருக்கு குறைந்த விலையில் பால் கிடைக்க தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்.
தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயத்துக்கு குறைந்தது 8 மணி நேரம் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விவசாய சங்கங்களையும் திரட்டி சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். அதற்காக போராட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக