
சென்னை:
விளைநிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றும் உத்தரப் பிரதேச அரசின் வழிமுறைகளை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிறது. நெல் உள்பட உணவு தானியங்களின் உற்பத்த்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனால், உணவுப் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஆனாலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை அபகரிக்கும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டாயமாக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காவும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காவும் நிலம் கையகப்படுத்தலுக்கும், நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கும் புதிய கொள்கையை உத்தரப்பிரதேச அரசு வகுத்துள்ளது.அதன்படி, நில உரிமையாளர்களுக்கு 33 ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு ஆண்டுத் தொகை வழங்கவும், அதனை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனை விரும்பாதவர்கள் ஆண்டுத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்றுக்கொள்ளலாம். தனியார் தொழில் நிறுவனங்களுக்காக நிலம் கையப்படுத்தப்பட்டால், நிலத்தின் மதிப்பில் 25 சதவீத அளவுக்கு நிகரான தொகையை அந்த தனியார் நிறுவனத்தின் பங்குத் தொகையாக பெறுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் இந்த அறிவிப்பு, விவசாயிகளையும் பங்குதாரர்களாக மாற்றுகிறது.அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் நிலத்தில் 7 சதவீத பரப்புள்ள பகுதி குடியிருப்பு நோக்கத்திற்காக நில உரிமையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிலத்தின் குறைந்தபட்ச பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதில் 17.5 சதவீதம் நில உரிமையாளர்களுக்கு வழங்க வகை செய்யும் புரட்சிகரமான திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகள் தங்களது மறுப்பைக் கூட பதிவு செய்ய முடியாது. இழப்பீடு என்ற வார்த்தை சட்டத்தில் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. நிலத்தை பறிகொடுப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் இழப்பீட்டை மட்டுமே பெற முடியும் என்று சட்டத்தில் உள்ளது. இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். நிலங்களை இழக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான புதிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
இப்படி எடுத்துச் சொல்வதால் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக பழிசுமத்தாமல் உத்தரப்பிரதேச அரசின் வழியில் தமிழக விவசாயிகளுக்காக புதிய கொள்கையை வகுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக