பேரவைத் தேர்தலில் பாமகவை தோற்கடிக்க ஆட்சியாளர்கள் திட்டம்: ராமதாஸ் புகார்

ஜயங்கொண்டம்:

                    வருகிற 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவைத் தோற்கடிக்க ஆட்சியாளர்கள் திட்டம் வகுத்துள்ளதாக பாமக நிறுவனர் ச. ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.   அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் புதன்கிழமை ஜயங்கொண்டத்தில் நடைபெற்றது.   

 முகாமில் ராமதாஸ் பேசியது:    

                   வருகிற 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவை எவ்வாறு தோற்கடிப்பது என்று ஆட்சியாளர்கள் திட்டம் வகுத்து வருகிறார்கள்.    வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குருவை எந்த  வழக்கிலேனும் கைது செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டால்,  2.50 கோடி வன்னியர்கள் சிறை செல்ல நேரிடும்.    பாமகவில்தான் மாற்று மது ஒழிப்புக் கொள்கை,  உழவர்களுக்கான மாற்று விவசாயத் திட்டம், விவசாய நிதிநிலை அறிக்கை போன்ற திட்டங்கள் ஆவணங்களாக வெளியிடப்படுகின்றன.  அவை சட்டங்களாக மாற வேண்டும்  எனில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார் ராமதாஸ்.  

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது:    

                            பாமக கட்சிப் பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் கிராமத்தில் உள்ள மாற்றுக் கட்சியைச்  சார்ந்தவர்களைச் சந்தித்துப் பேசி, கட்சியின் கொள்கைகளை விளக்கி, அவர்களை பாமகவில் இணைக்கப் பாடுபட  வேண்டும்.    சாராயக் கலாசாரம், தொலைக்காட்சி கலாசாரம்,  ஓட்டுக்கு நோட்டு என்கிற  கலாசாரம் ஒழிக்கப்பட  வேண்டும். நான் மத்திய அமைச்சராகப் பொறுபேற்ற  காலத்தில்தான் மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு,  108 ஆம்புலன்ஸ் சேவை, புகையிலை ஒழிப்பு, புகையிலைக்குத்  தடை, கிராமப்புற சுகாதாரத் திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன என்றார் அன்புமணி.    முகாமுக்கு, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு தலைமை வகித்தார். 

                  முன்னாள் மத்திய இணை அமைச்சர்  அரங்க. வேலு முன்னிலை வகித்தார்.     முகாமில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, சட்டப் பாதுகாப்புக் குழுத் தலைவர்  இரா. பாலு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்  வேங்கை. புலியன், திருகச்சியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   முன்னதாக, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா. பாலு வரவேற்றார். அரியலூர் மாவட்டச் செயலர் க. வைத்தி நன்றி கூறினார்.

0 கருத்துகள்: