
கும்மிடிப்பூண்டி:
ஜாதி வாரியாக தனி இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலமே தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பட்டு சமூக மாற்றம் நிகழும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். கும்மிடிப்பூண்டியில் பாமக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
நிறைவு நாளில் ராமதாஸ் பேசியது:
ஆறரை கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னிய இனமக்கள் மேம்பாடு அடையாமல் வாழ்ந்து வருகின்றனர். தனி இட ஒதுக்கீடு என்பது வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல; தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு அளவை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பு, உயர் கல்வியில் பெற வழி வகை செய்யும். சமூக மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி தனி இட ஒதுக்கீடுதான்.
வன்னியர்கள் மற்றும் தலித்துகள் இணைந்தால் தங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினால், திராவிடக் கட்சிகள் சூழ்ச்சி செய்து இவ்விரு இனத்தவரிடையே பிரிவினைகளை உருவாக்கி வருகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி, விவசாய முன்னேற்றம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர் மறுமலர்ச்சி, தமிழ் வளர்ச்சி போன்றவைகள் நிறைவேற்றப்படும். இந்தியாவிலேயே அதிகமான விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணமான டாஸ்மாக் கடைகள் பாமக ஆட்சிக்கு வந்தால் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார் ராமதாஸ்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,
மத்திய அமைச்சராக தான் பதவி வகித்த காலத்தில் 950 கோடி செலவில் திட்டமிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் "108' ஆம்புலன்ஸ் சேவை. ஐ.நா. சபை செயலாளர் பான்-கீ-மூனால் பாராட்டப்பட்ட திட்டம் இது. பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தமிழகத்தில் இது வரை 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 500 ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 50 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன என்றார்.
மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்,
அடுத்த தலைமுறையினர் வாழ்வில் மேம்பாடு அடையும் வண்ணம் அடித்தட்டு மக்களுக்காக போராடி வரும் கட்சி என பாமக-வை குறிப்பிட்டார்.முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு பேசுகையில், மத்திய அமைச்சராக இருந்தபோது, கும்மிடிப்பூண்டியில் சுமார் 60 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலத்திற்கான திட்டத்தையும், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர பகுதியான நெல்லூருக்கு கூடுதல் மின் ரயிலையும், அத்திப்பட்டில் இருந்து பெரியபாளையம் ஊத்துக்கோட்டை வழியாக புத்தூர் வரை சுமார் 400 கோடி செலவில் புதிய ரயில் பாதைக்கான திட்டத்தையும் நிறைவேற்றியதாக குறிப்பிட்டார்.
விழாவில் பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.ரமேஷ் வரவேற்றார். திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக