
ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துச் சமுதாய சங்கத் தலைவர்கள்
சென்னை:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசவுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து சமுதாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாதவ மகா சபை, கொங்கு நாடு முன்னேற்ற சங்கம், அகில இந்திய தேவர் பேரவை, தமிழ்நாடு நாடார் பேரவை, நாயுடு மக்கள் சக்தி இயக்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், முத்தரையர் சங்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
ஒரு மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு சலுகை பெற தகுதி படைத்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு மூலம் இந்த உரிமை மாநில அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவைத் தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பின்படி, தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிடக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்கிடையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், தனியாக நடத்துவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக, பொருளாதார அந்தஸ்து குறித்த புள்ளி விவரங்களோடு கணக்கெடுப்பு நடத்தினால்தான் உரிய பலன் கிடைக்கும். எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசுக்காக காத்திராமல், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழு விவரங்களோடு கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மாநில அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-க்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லையெனில், டாக்டர் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய சங்கங்களின் பிரதிநிதிகள் அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் பா.ம.க. ராமதாஸ் பேசியது:
பிப்ரவரியில் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இல்லாமல், ஜூன் மாதத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவதில் சூழ்ச்சி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்தெந்த ஜாதியில் எத்தனை பேர் உள்ளனர் என்று வெறும் தலைகளை மட்டும் எண்ணும் கணக்கெடுப்பு அல்ல. அவ்வாறு நடத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது. ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார நிலை குறித்த விவரங்களுடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மத்திய முன்னாள் இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக