
திருநெல்வேலி:
தலித் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்புக் குழு ஆகியவை சார்பில், இம்மானுவேல் சேகரன் 87-வது பிறந்த நாள் விழா, பாட்டாளி மக்கள் கட்சியில் வடிவேல் ராவணனுக்கு மாநில பொதுச்செயலர் பதவி கொடுத்ததற்கு ராமதாசுக்குக்கு பாராட்டு விழா ஆகியவை திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியது:
தமிழகத்தில் வடக்கே வாழும் வன்னியர்களும், தெற்கே வாழும் தலித்களும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் ஆவர். பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கும் முன்னரே தலித்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். வன்னியர்களுக்கும், தலித்களுக்கும் இடையே நேச உணர்வு மலர வேண்டும்.
அதற்காகத்தான் பாமக பாடுபடுகிறது. இன்றைய தலித் இளைஞர்கள் அரசியல்ரீதியாக சிந்திக்க வேண்டும். நாம் சமூக, பொருளாதார நிலையில் எங்கு இருக்கிறோம், அரசியல் அதிகாரம் நமக்கு ஏன் இன்னும் கிடைக்கவில்லை போன்ற கேள்விகளை எழுப்பி சிந்திக்க வேண்டும். எவ்வளவு தூரம் ஆழமாக சிந்திக்கிறீர்களோ, அந்த அளவுக்கு தெளிவு பெற முடியும். அப்போதுதான் நீங்கள் அரசியல் விழிப்புணர்வு பெற முடியும்.
அதன் பின்னர் அரசியலில் என்ன மாற்றம் நிகழ வேண்டும், என்ன மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதைக் கணிக்க வேண்டும். இவ்வாறு செயல்பட்டால்தான் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த முடியும். கூச்சல், குழப்பத்தால் எதையும் சாதிக்க முடியாது. நமது வாக்கு வங்கியைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைப் பெறுகிறவர்கள், ஏன் நமக்கு ஒன்றும் செய்வதில்லை என்பதை ஆராய வேண்டும். நமக்கான அரசியல் களம் எது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
முதலில் இன்றைய தலித் இளைஞர்கள் திரையரங்கு, டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இம்மானுவேல் சேகரன் பெயர் வைக்கவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். இதேபோல தலித் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாமக தோள் கொடுக்கும் என்றார் ராமதாஸ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக