சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் கல்வி ரத யாத்திரை நடத்த திட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தருமபுரி:

               ட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் கல்வி ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் அறிவித்துள்ளார்.  

 தருமபுரி அருகே சோலைகொட்டாயில் உள்ள டாக்டர் ராமதாஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் பேசியது: 

                 தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வன்னியர்கள் அடர்த்தியாக உள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு, மத்திய, மாநில அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருப்பதால், தருமபுரி மாவட்டத்தில் இருந்து அரசுப்பணிக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

               இருப்பினும் பொருளாதார ரீதியாக தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தான் உள்ளது. இங்குள்ள பட்டதாரிகளில் பெரும்பாலானோர் முதல்தலைமுறை பட்டதாரிகளாகத் தான் உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வைராக்கியமாக படித்து முன்னேறினால் தான், இம்மாவட்டம் பொருளாதார ரீதியாக முன்னேறும்.  தொலைக்காட்சிகளால் மக்களுக்கு பயனில்லை. 

             சமுதாயம்தான் சீரழிகிறது.  நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமெனில் மதுக்கடைகள், திரையரங்குகள், தொலைக்காட்சி சானல்களை உடனடியாக மூட வேண்டும். உயர்ந்த எண்ணம் கொண்ட, அறிவார்ந்த, ஏழ்மையில்லாத, ஒழுக்கமான, பொருளாதார வளமிக்க சமுதாயத்தை உருவாக்குவது தான் பாமகவின் கனவு. பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளை படிப்பதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்ய 15ஆண்டுகளாக பாமக போராடியுள்ளது. 

                ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.இ. ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் பாமக தான்.  தருமபுரி மாவட்டத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மகளிர் கல்லூரி கட்ட ஏற்கெனவே இடம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் சோலைகொட்டாய் ராமதாஸ் மேல்நிலைப்பள்ளிக்கு என ரூ. 1 கோடி கல்வி நிதி திரட்ட வேண்டியுள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் ஜூன் மாதத்தில் கல்வி ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளேன். 

                மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கல்வி நிதி திரட்டப்படும் என்றார்.  மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, சமூக முன்னேற்றச் சங்கத் தலைவர் கே.கோபால், மாநில பொருளாளர் க.மணிவண்ணன், மாவட்டத் தலைவர் ஜே.சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: