மேட்டூர்:
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மதுவை ஒழிப்போம் என்று கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுரத்தில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் கூறியது:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அரசியல் கட்சிகள் சிந்தித்து வருகின்றன. ஆனால் ஆனால் பாமக ஒரு சமுதாயம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்திக்கிறது.மதுவால் வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு விளைகிறது. ஆதலால் சமுதாயம் அழிகிறது. அதனால்தான் குடிக்கக்கூடாது என்று கூறிவருகிறோம். நல்ல குடிமகனை உருவாக்குவதில் அரசுக்கும் பங்கு உண்டு.பாமக ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்கள் மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிடும் நிலை ஏற்படும். செல்வந்தரின் குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான கல்வி ஏழைகளுக்கும் கிட்டும்.
பாமக.வின் இட ஒதுக்கீட்டு போராட்டத்துக்கு பிறகுதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்டத் துறைகளில் அதிக இடம் கிடைத்து வருகிறது என்றார்.பின்னர் எடப்பாடியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் 1996-ம் ஆண்டு பாமக தனித்து போட்டியிட்டு எடப்பாடி, ஆண்டிமடம், தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள வன்னியர்கள் மட்டும் பாமகவுக்கு வாக்கு அளித்தாலே 120 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறமுடியும்.
வன்னியர் சமுதாயத்தினர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே கடைக்கோடி மக்களும் வாழ்க்கையில் முன்னேற முடியும். இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட காரில் செல்லும் அளவுக்கு விவசாய கொள்கை என ஏராளமான திட்டங்கள் பாமகவிடம் உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் சட்டங்களாக மாற பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும் என்றார்.இந்த பயிற்சி முகாம்களில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தமிழரசு, வை.காவேரி, ப.கண்ணன், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் ராமர் உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக