பா.ம.க.வில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு: டாக்டர் ராமதாஸ்


  சட்டசபை தேர்தலில்

பா.ம.க.வில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு;

நேர்காணல் நடத்திய டாக்டர் ராமதாஸ் பேட்டி

 
திண்டிவனம்

          வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் அதிகமான இளைஞர்கள் போட்டியிடுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.

             விருப்ப வேட்பு மனுக்களை அளித்தவர்கள் நேர்காணலுக்காக தங்களின் கட்சி பணிகள் குறித்த விவரங்கள், வெற்றிவாய்ப்பு பற்றிய விவரங்களுடன் நேற்று காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்தனர்.  நேற்று காலை 10 மணி அளவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடந்த நேர்காணலுக்கு பா.ம.க. இளைஞர் சங்க மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மாநில பொதுச்செயலாளர் வடிவேல்ராவணன், வன்னியர் சங்க மாநில தலைவர் குரு, பொருளாளர் சையதுஅலி, சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

            விருப்பமனு அளித்தவர்கள் மாவட்டம் வாரியாக அழைக்கப்பட்டு கட்சி பொறுப்பு, சேவைகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.    நேர்காணல் நிகழ்ச்சியின்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  பேட்டி அளித்தார். 
 
அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:- 
 
             பா.ம.க.வில் இதுவரை 6 ஆயிரத்து 150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இதில் ஒருவருக்காக பலர் மனுதாக்கல் செய்து உள்ளனர். இன்று (அதாவது நேற்று) காலையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் முடிந்து, மற்ற மாவட்டங்களுக்கான நேர்காணல் தொடர்ந்து நடைபெறும்.

               இந்த நேர்காணல் இன்று முடிவடைந்து விடும். முடியாமல் போனால் நாளையும் தொடரலாம். விருப்பமனு அளிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டவில்லை. பெண்களுக்கு சட்டப்படி 33 சதவீதம் கிடைத்தால்தான் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் வருவார்கள் என நினைக்கிறேன்.  கடந்த ஓராண்டு காலமாக 60 தொகுதிகளை தேர்வு செய்து, கிராமங்களில் களைப்பணியாளர்கள் மைக்ரோ பிளானிங் முறையில் இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களில் புதுமுகங்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பேர் இடம்பெறுவார்கள்.

                   தொகுதி பங்கீடு முடிந்தவுடன் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவேன். கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் சென்னை மற்றும் மாவட்ட அளவிலான கூட்டங்களில் பங்கேற்பேன்.   தேர்தல் பிரசாரத்தின்போது பா.ம.க.வின் கொள்கைகள், தி.மு.க.வின் 5 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் மற்றும் தி.மு.க. அரசு தற்போது செய்யவிருக்கும் முக்கிய திட்டங்கள் குறித்து விளக்கி பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

             இன்னா நாற்பது, இனியவை நாற்பது போல தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்தும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகள் ஆட்சியின்போது செய்ய தவறியதையும் பேசுவோம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தி.மு.க. அரசால் பலன் பெற்றுள்ளனர். எனவே எங்கள் கூட்டணிக்கு மக்கள் பெரும் வெற்றி வாய்ப்பை தருவார்கள். தொகுதி உடன்பாடு முடிவடைந்தவுடன் குறைந்தபட்ச செயல் திட்டமாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

               உணவு பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து உபரி உற்பத்தி வேளாண் பொருட்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் அரசை வலியுறுத்துவோம். வேளாண்பொருட்கள் மழை காலத்தில் பாதிக்கப்பட்டு விலைவாசி உயரும்.  பின்னர் வெயில் காலத்தில் படிப்படியாக குறைந்து விலைகள் கட்டுக்குள் வந்துவிடும். தற்போது காய்கறி விலைகள் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.  

0 கருத்துகள்: