
தருமபுரி:
தருமபுரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் முல்லை வேந்தன் (பாப்பிரெட்டிபட்டி), இன்பசேகரன் (பெண்ணாகரம்), பா.ம.க. வேட்பாளர் சாந்த மூர்த்தி (தருமபுரி), பாடிசெல்வம் (பாலக்கோடு) ஆகியோரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது டாக்டர் ராமதாஸ் பேசியது:-
புதிதாக கட்சி தொடங்கி நடத்தும் ஒரு நடிகர் (விஜயகாந்த்). என்னைப்பற்றி அவதூறாக பேசுகிறார். ஏதேதோ பேசுகிறார். அவருக்கு இதுவரை நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். அந்த நடிகருக்கு என்ன தெரியும்? அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அரசியலில் எல்.கே.ஜி. அல்ல, பிரிகேஜி கூட படிக்காதவர். அவர் என்னைப் பற்றி பேசுவதா? கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தார். அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதாவை நம்பகத் தன்மை இல்லாதவர் என்றும், தைரியம் இல்லாதவர் என்றும் விமர்சித்தார்.
தைரியம் இருந்தால் ஜெயலலிதா தனியாக போட்டியிடட்டும் என்றெல்லாம் கூறிய அந்த நடிகர் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். என்னவென்று கேட்டால் ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை. எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்து இருக்கிறேன் என்கிறார். இதை அ.தி.மு.க. தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏராளமான கெடுபிடிகளை விதித்துள்ளது.
ஆம்புலன்சை கூட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் உள்ளது. இது அதிகார வரம்பை மீறிய செயலாகும். தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொன்னாலே வெற்றி உறுதி. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இது வெற்றி கூட்டணி. பலம் வாய்ந்த கூட்டணி. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக