செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் வ.கோ.ரங்கசாமியை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

திருக்கழுகுன்றத்தில் திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார் ராமதாஸ்.
 
செங்கல்பட்டு:
 
          தற்போது உருவாகியுள்ள சமூக நல்லிணக்க சமத்துவ கூட்டணியின் மூலம் என்னுடைய 30 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார். 
 
          செங்கல்பட்டு தொகுதி பாமக வேட்பாளர் வ.கோ.ரங்கசாமியை ஆதரித்து ராமதாஸ் சனிக்கிழமை பிரசாரம் செய்தார். முன்னதாக திருப்போரூர் தொகுதி வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்தை ஆதரித்து திருக்கழுகுன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். 
 
 அப்போது ராமதாஸ்பேசியது:
 
                    திமுக ஆட்சியில் நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் ஆட்சியில் இன்னும் பல மக்களுக்கான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது திமுக, திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்கக் கூட்டணியை உருவாகியுள்ளன. இந்தக் கூட்டணியின் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. 
 
            சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டன. தற்போது இந்த சமத்துவக் கூட்டணியால் பாமக ஆதரவாளர்களும், விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாளர்களும் தோள் மீது கைபோட்டுக் கொண்டு கொடியை மாற்றி பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நல்லிணக்கத்தைப் பார்க்கும்போது நான் 30 ஆண்டுகளாக எதற்காக பாடுபட்டேனோ அதற்கான பலன் தற்போது இக்கூட்டணியின் வாயிலாக கிடைத்துள்ளது. நான் கண்ட கனவு நனவாகியுள்ளது என்றார்.

0 கருத்துகள்: