சிதம்பரத்தில் ஸ்ரீதர்வாண்டையாரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்


சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவரும், வேட்பாளருமான ஜி.எமஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்
 
சிதம்பரம்:
 
            முதல்வர் கருணாநிதி ஆட்சியின் நலத்திட்டங்களால் தென்மாவட்டங்களில் தாய்மார்கள், ஏழைகள், நாட்டுபுற மக்கள் உள்ளிட்டோர் மத்தியில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது என பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்தார். 
 
சிதம்பரத்தில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாரை ஆதரித்து புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ச.ராமதாஸ் பேசியது:
 
              ஸ்ரீதர்வாண்டையாரை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பின்போது அவராகவே வந்து என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். ஸ்ரீதர்வாண்டையார் தைலாபுரம் தோட்டத்தில் என்னை சந்தித்து ஆதரவு கேட்டார். நானும், அன்புமணியும் வெற்றி பெறுவது உறுதி என்று அவரை வாழ்த்தினோம். அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தர வேண்டும். 
 
                  பாமக தொகுதிகளை விட கூட்டணிக் கட்சி தொகுதிகளில் பாமகவினர் 10 மடங்கு பணியாற்ற வேண்டும் என தொண்டர்களிடம் பலமுறை கட்டளை இட்டு வருகிறேன். ஆனால் இங்கு ஸ்ரீதர்வாண்டையாரின் வெற்றிக்கு 20 மடங்கு பணியாற்ற வேண்டும். கருணாநிதி தோழமைக் கட்சி தலைவர்களை அறிவாலயத்துக்கு அழைத்து கருத்து கேட்டார். அதில் அதிக நேரம் பேசி நல்ல கருத்துக்களை சொன்னவர் ஸ்ரீதர்வாண்டையார். 
 
              இந்த கூட்டணி சமூகநீதி கூட்டணி என கருணாநிதி கூறினார். சமுதாயங்களை இணைத்து நல்லிணக்கத்தோடு வாழ கருணாநிதியால் அமைக்கப்பட்ட கூட்டணி இந்த கூட்டணி. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள் நல்லிணக்கமாக வாழ அமைக்கப்பட்ட அணி. மதுரை மாவட்டம் சோழவந்தான், திண்டுக்கல், கோவில்பட்டி, ஆலங்குடி பகுதிகளில் மூ.மு.க. தொண்டர்கள் என்னை சந்தித்து, பாமக வெற்றிக்கு கடுமையாக பணியாற்றுமாறு ஸ்ரீதர்வாண்டையார் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்
 
                 .சில ஊடகங்கள் நமக்கு எதிராக செயல்படுகின்றன. நமது பேச்சை சரியாக வெளியிடுவதில்லை. அதிமுக மற்றும் நடிகர் பற்றிய செய்திகளை பக்கத்துக்கு பக்கம் வெளியிடுகிறது என்றார் ராமதாஸ் .கூட்டத்தில், பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், திமுக நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார், பாமக மாவட்டச் செயலர் வேணு.புவனேஸ்வரன், நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில பட்டதாரி ஆசிரியரணி துணைச் செயலர் இரா.காவியச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: