செஞ்சி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து மேல்மலையனூரில் பிரசாரம் செய்யும் அன்புமணிராமதாஸ்.
செஞ்சி:
            தமிழகத்தில் ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராக வேண்டும்; அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை வளத்தியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது:

                  செஞ்சி தொகுதி வேட்பாளர் தமிழக வேட்பாளர்களிடையே மிகக் குறைந்த வயதுடையவர். என்னப் பிரச்னைகள் ஆனாலும் தீர்த்து வைக்கக்கூடியவர். இவர் இங்கு வெற்றி பெற்றால்தான் அங்கு கருணாநிதி முதல்வராக முடியும். அரசின் நல்ல திட்டங்கள் அனைத்தும் தொடரும். ஜெயலலிதா 10 ஆண்டுகள் தமிழகத்தில் முதல்வராக இருந்தார். 

             இங்கு அதிமுகவினர் யாராவது இருந்தால் மைக் தருகிறேன் ஜெயலலிதாவின் ஒரு நல்ல திட்டத்தையாவது கூற முடியுமா? கருணாநிதி வாரத்துக்கு பள்ளி பிள்ளைகளுக்கு 5 முட்டைகளை வழங்கினார். திருமண உதவித்திட்டம், ஒரு ரூபாய் அரிசி என பல் வேறு நல திட்டங்களை வழங்கினார்.ஆனால் ஜெயலலிதா திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்தார், இலவச மின்சாரத்தை ரத்து செய்தார், கருணாநிதி நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்தார். 
 
            ஜெயலலிதா சொன்னதைச் செய்யமாட்டார்.கருணாநிதி சொன்னதைச் செய்யக்கூடியவர். இலவச டி.வி., கேஸ் இணைப்பு கொடுத்தார் தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மிக்சி, கிரைண்டர் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஜெயலலிதா அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் ஆடு, மாடு வழங்கப்படும் என அறிவித்து மாணவர்களை பள்ளிக்கூடம் போகவிடாமல் ஆடு மேய்க்க போக வழி கூறியுள்ளார் என்றார் அன்புமணி ராமதாஸ்.

              இதனைத் தொடர்ந்து மேல்மலையனூர், அவலூர்பேட்டை, கடலாடிகுளம், ஆலம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் அன்புமணிராமதாஸ் பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின் போது முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் செஞ்சிமஸ்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்: