திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் சிவாஜிக்கு அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் : 

          ""தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், பா.ம.க.,வின் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்,'' என, கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார். திருவள்ளூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாஜிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு மணவாளநகரில் திறந்த ஜீப்பில் அன்புமணி பிரசாரம் செய்தார்.

பா.ம.க.  மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசியதாவது: 

             தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும் பா.ம.க.,வின் கொள்கையான மதுக்கடைகளை ஒழித்தல், வேளாண்மைக்கு முதன்மை போன்ற கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். வன்னியர் சமுதாயத்துக்கு 21 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த ராமதாசை கொச்சைப்படுத்தும் விஜயகாந்த் உள்ள அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க., கூட்டணி மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணி நடிகர், நடிகைகள் கூட்டணி. இவர்கள் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண மாட்டார்கள்.

              பசுமை தாயகத்தை கொச்சைப்படுத்தி நடிகர் விஜயகாந்த் பேசி வருகிறார். 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் சமூக சிந்தனை, பசுமை தாயகம், வேளாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளாரா? தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்., என, கூறிக்கொள்ளும் அவரை அ.தி.மு.க.,வினர் எப்படி பொறுத்துக்கொள்கின்றனர்.

           குடிபோதையில் கட்சியின் வேட்பாளரையே மறந்துவிட்ட அவர், கட்சியின் எம்.எல்.ஏ.,வாக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவரிடம் மரியாதை இருக்காது. எனவே, தி.மு.க.,வின் வளர்ச்சி திட்ட பணிகள் மீண்டும் தொடர தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.

0 கருத்துகள்: