காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாக்குச் சேகரிப்பு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் (இடமிருந்து 2-வது).
காஞ்சிபுரம்:
 
         காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் வாக்குச் சேகரித்தார்.
 
இது தொடர்பான பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்  பேசியது: 

              தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் நேர்மையும் பாரபட்சமற்றத் தன்மையும் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் அந்த நேர்மை இல்லை. தமிழகத்தில் மட்டுமே கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனைகளை சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் ஏன் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை.மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ள சகாயம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்கிறார். ஆர்.டி.ஓ. மிரட்டி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது புகார் கொடுக்கச் சொல்கிறார். 
 
              ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதா அவர் வேலை. தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் செல்லும் இடங்களில் என்னுடன் வருபவர்களை வைத்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளேன். அனைவருமே திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைத்தான் சொல்லி வருகின்றனர்.இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும்... திமுக தலைமையிலான கருணாநிதி ஆட்சியில் செய்தவை எல்லாம் இனியவை நாற்பது. அதிமுக ஆட்சி செய்தவை எல்லாம் இன்னா நாற்பது. கிராமப்புறப் மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தார் கருணாநிதி. அதனை ஜெயலலிதா 25 சதவீதமாக உயர்த்தினார். 
 
               சிலர் நீதிமன்றம் சென்றபோது இடஒதுக்கீடே கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாத சூழ்நிலை உருவாக்கிவிட்டது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது நான், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் அதனை கடுமையாக எதிர்த்தோம். ஆனால் அதிமுகவில் இருந்து யார் இதனை எதிர்த்தனர்.அதிமுக கூட்டணியில் நிதானமிழந்துப் பேசி வரும் நடிகர் ஒருவர் ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அவர் ஆஃப் அடித்தாலும் சரி இல்லை ஃபுல் அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. 
 
                நாங்கள் அரிதாரம் பூசிக் கொண்டு மாலை 5 மணிக்கு மேல் மேடையில் தோன்றுபவர்கள் அல்ல.வேட்பாளரை மேடையில் அடிப்பவர் நாளை எம்எல்ஏ ஆனால் சட்டப் பேரவைத் தலைவரைக் கூட அடிப்பார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது முற்றிலும் சரியானது என்றார் ராமதாஸ்.

0 கருத்துகள்: