காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடைசி நேர திருப்பமாக பாமகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் பிரசாரத்தில் இறங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதனை எதிர்பாராத அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் முன்னாள் செய்யாறு எம்எல்ஏ உலகரட்சகனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரமும் போட்டியிடுகின்றனர். இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இங்கு வெற்றி-தோல்வி கணிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது. இதனால் தேர்தல் நேரத்தில் இவர்கள் யாரை ஆதரிப்பர் என்பது புதிராய் இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமக ஆதரவாக மதிமுகவினர் பிரசாரத்தில் குதித்துள்ளனர். காஞ்சிபுரம் மதிமுக நகர செயலர் வளையாபதி தலைமையில் மதிமுகவினர் வீதிவீதியாகச் சென்று பாமகவுக்கு வாக்குச் சேகரித்தனர். நகர இளைஞர் அணி பொன்மொழி உள்ளிட்ட பலர் இப் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
இது குறித்து மதிமுக நகரச் செயலர் வளையாபதி கூறியது:
நான் தனியாக முடிவெடுத்து பாமகவை ஆதரிக்கவில்லை. எங்கள் மேலிடத்தில் இருந்து பாமகவை ஆதரிக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி நாங்கள் பாமகவுக்கு வாக்குச் சேகரித்தோம். கிராமப்புற பகுதிகளில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்களும் பாமகவுக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர் என்றார். காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் மதிமுக நகர செயலர் வளையாபதி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக