இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பது:-
மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் தோனிக்கு முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி, உலகக் கோப்பையை பெற்றுத்தந்த உங்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழக்கூடிய நீங்கள், லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை பாழாக்கும் போதைப் பழக்கத்தை அவர்கள் மீது திணிக்காமல், மறைமுக மதுபான விளம்பரங்களில் இருந்து விலக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மதுபான விளம்பரங்கள் இந்திய நாட்டில் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், சோடா, தண்ணீர், இசைத்தட்டு என இல்லாத பொருட்களின் பெயரில் மதுபான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இத்தகைய மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க முடியாது என சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவருக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 20 கோடி வழங்க மதுபான நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி, நீங்கள் மதுபான நிறுவனங்களின் சதிவலையில் சிக்காமல் மறைமுக மதுபான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். தற்போது நீங்கள் இடம்பெற்றுள்ள அத்தகைய விளம்பரங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக