மதுக்கடைகளை படிப்படியாக மூடவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மது இல்லாத மாநிலத்தை எப்படி உருவாக்குவது? என்று மராட்டிய மாநிலம் வழிகாட்டியிருக்கிறது. மராட்டியத்தில் இனி 25 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும், ஏதேனும் ஒரு ஊரில் 25 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இவை வரவேற்கப்படவேண்டியவை மட்டுமின்றி மற்ற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டியவை ஆகும்.
மதுவிலக்கு கொள்கையைப் பொறுத்தவரை மராட்டிய அரசு தொடக்கத்திலிருந்தே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறது. 1949ஆம் ஆண்டு மும்பை மதுவிலக்கு சட்டப்படி அம்மாநிலத்தில் ஏதேனும் பகுதியில் வசிக்கும் பெண்களில் 50 விழுக்காட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இப்போது காந்தியவாதி அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த மக்களில் 25 விழுக்காட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தாலே மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பராட்டப்பட வேண்டிய முடிவாகும்.
ஆனால், தமிழகத்திலோ நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மதுக்கடைகள் மூடப்படுவதில்லை. மராட்டியத்தில் 25 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 13 வயது பள்ளி மாணவர்கள் கூட மது குடிப்பதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதுமே முழு மதுவிலக்கை கொண்டுவரும்படி நான் வலியுறுத்தி இருந்தேன். அதன் முதல் படியாக மராட்டிய மாநிலத்தில் இருப்பது போல, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் மது பரிமாறப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாள்தோறும் காலை 10 மணி முதல்ர பிற்பகல் 1 மணிவரை 3 மணி நேரத்திற்கு மட்டுமே மதுக்கடைகளை திறந்திருக்க வேண்டும். இதையும் படிப்படியாக குறைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் மதுக்கடை ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை படிப்படியாக அரசு ஊழியர்களாக்கி மற்ற துறைகளில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக