சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பாளர் ஜெயராமன் இல்லத் திருமண விழா: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ப்பு

சென்னை:
            சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பாளர் ஜெயராமன் மகள் அனிதா -செந்தில்குமார் திருமணம் நேற்று  நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருமணத்தை நடத்தி வைத்தார். 
மணமக்களை வாழ்த்தி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-


            எளிமை, மக்கள் சேவை உழைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர் ஜெயராமன் இந்த தேர்தலில் உண்மை, உழைப்பு, எளிமை, தியாகம் தோற்றுப் போனது. ஏதோ ஒன்று வென்றது. மது பழக்கம் இல்லாத, வன்முறை இல்லாத, கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க நாம் பாடுபட்டு வருகிறோம்.  சிறு குழந்தைகள் முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். நமது தேசிய விளையாட்டு ஆக்கி. பலருக்கு அது தெரிய வில்லை. எத்தனையோ விளையாட்டுகள் இருக்கும் போது கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எல்லா விளையாட்டுகளையும் பள்ளிகள் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


            பெண்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். ஆனால் பெண்களை இழிவு படுத்தும் டி.வி.தொடர்களில் அவர்கள் மூழ்கி விடுகிறார்கள். பணக்காரர் வீட்டு குழந்தைகளும், ஏழை வீட்டு குழந்தைகளும் தரமான கல்வி கற்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி வேண்டும் என்கிறோம்.  நிகர்நிலை பல்கலைக்கழ கங்களில் மாணவர்கள் இடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த சமூக அவலங்களைகளைய வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியது:-


              தமிழக இளைஞர்களுக்கு இது சோதனை காலம். மது, புகை பழக்கங்களில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். இது அரசியல் பிரச்சினை அல்ல. வாழ்க்கை பிரச்சினை, சமூக பிரச்சினை, மதுவை ஒழிக்க பாடுபடும் ஒரே கட்சி பா.ம.க. தான். இந்த தேர்தலில் பா.ம.க. தோல்வி அடையவில்லை. ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் கிடைத்தது எங்களுக்கு எதிரான வாக்குகள் அல்ல. ஜி.கே.மணி குறிப்பிட்டது போல் ஒரு பெரிய சுனாமி வந்தது. அவ்வளவு தான். இதனால் எங்களுக்கு நஷ்டம் இல்லை மக்களுக்கு தான். இவ்வாறு அவர் பேசினார்.


            விழாவில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வேலு, குரு எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், எஸ்.வி.சேகர், புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.


0 கருத்துகள்: