பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
சமச்சீர் கல்வி பற்றி முடிவெடுப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி.பார்த்திசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உச்சநீதிமன்றம், 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இருவரும் இடம்பெறவேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். ஆனால், குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் 2 பள்ளிகளின் முதலாளிகள். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் தரும் பணக்காரர்களுக்காக மட்டுமே பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும்பாடு குறித்து எதுவும் தெரியாது.
அதுமட்டுமின்றி சமச்சீர் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே. சமச்சீர் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இருக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் ஒருசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலைப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக