சென்னை:
தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியது:-
கல்விகண் கொடுத்தவர் காமராசர். அந்த காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான், ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பல உயரிய பொறுப்புகளில் பதவிக்கு வந்தனர். காமராஜரின் ஆட்சிக்கு பிறகு நர்சரி பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளி எப்படி உருவானது? ஏழைகள் பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது எப்படி? கல்விக் கட்டண கொள்ளைக்கு துணை போனவர்கள் ஆட்சியாளர்கள்தான்.
இப்போது நடைபெறும் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்க வேண்டும். அரசே அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் கட்டாய கல்வியையும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர் கூட சொல்ல முடியாது. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டும். பாட்டாளி மாணவர்கள் சங்கத்தினர் அரசே கல்வி கொடு, அரசே கல்விக் கூடங்களை நடத்து என்ற முழக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும், போராட்டம் நடத்துங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெயராமன், பாரிமோகன், சரவணன், செஞ்சி ரவி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக