சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்



http://mmimages.mmnews.in/Articles/2011/Jun/eef0799c-402f-46d8-b47a-e39275d48336_S_secvpf.gif




சமச்சீர் கல்வியை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். உடன் பா.மக. தலைவர் ஜி.கே. மணி
சென்னை:
        சமச்சீர் கல்வியைக் கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.  சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியது:  
          மாணவர்கள் புத்தகமே இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் அவலநிலை தமிழகத்தில்தான் உள்ளது.  சமச்சீர் கல்வியில் அக்கறை இருந்தால், இதை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என்று முத்துக்குமரன் குழுவிடமே ஆலோசனைகளைக் கேட்டிருக்கலாம்.  எந்த ஆட்சியாளர்களுக்கும் சமச்சீர் கல்வி மேல் அக்கறை கிடையாது. அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கடந்த அரசு குறைகளோடு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், இப்போதைய அரசு ஒட்டுமொத்தமாக இதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  

          அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஊடகங்களும் சமச்சீர் கல்விக்கு எதிராக உள்ளன. சமச்சீர் கல்வி வந்தால் ஏழைகளும், கிராமப்புற மாணவர்களும் நல்ல வேலைகளுக்குப் போட்டியிடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.  சாராயக் கடைகளை எடுத்து நடத்தும் அரசு, கல்வியை தனியாரிடம் வழங்கியுள்ளது.  மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் சமச்சீர் கல்வி வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். எல்லாப் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்க வேண்டும்.  

         முத்துக்குமரன் குழு தனது பரிந்துரை அறிக்கையில் தமிழ்மொழிக் கல்வி வர வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழ் வழியில் கல்வியைக் கொண்டுவரும் எண்ணம் யாருக்கும் இல்லை.  தமிழ் வழிக் கல்வி என்பதில் சென்ற அரசும், இந்த அரசும் தனியார் பள்ளிகளிடம் அடி பணிகின்றன.  பா.ம.க. ஆட்சிக்கு வந்தாலொழிய இதில் மாற்றம் வராது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் வளரும். சமச்சீர் கல்வி வரும். அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும்.  

        மழலையர் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தமிழில் இருக்க வேண்டும். இதை நோக்கிப் பயணம் இருக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.  பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: