தமிழகத்தில் 1976க்குப் பிறகு தொடங்கப்பட்ட மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து : பா.ம.க. சார்பில் வழக்கு

           தமிழ்நாட்டில் 1976 ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது:

                1974 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தில், புதிய தனியார் பள்ளிகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளை முறைப்படுத்துவதாகக் கூறி, புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது சட்டத்திற்கு எதிரானது ஆகும்.

              இந்த சட்ட விதிமுறைகள் 7 வது பிரிவில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் தனி அமைப்பாக கருதப்படும் என்றும், கட்டணத்தின் அடிப்படையில் இப்பள்ளிகள் செயல்படும் என்றும், இவற்றில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு மோசடி செயல் ஆகும்.

          புதிதாக உருவாக்கப்பட்ட மெட்ரிக் பள்ளிகளை, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளுடன் ஒப்பிட முடியாது. இந்தப் பள்ளிகள் அனைத்தும் வணிக நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. மெட்ரிக் பள்ளிகள் தான் தரமான கல்வியை அளிக்கின்றன என்று அவற்றை நிர்வாகம் முன்வைக்கும் வாதம் உண்மை அல்ல. பெரும்பாலான பள்ளிகள் தனிப்பயிற்சி மையங்கள் போல்தான் செயல்படுகின்றன.

              தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை கொண்டு வரப்படுவதை தனியார் பள்ளிகள்தான் எதிர்க்கின்றன. இதற்காக இவை கூறும் காரணங்கள் சரியானவை அல்ல. சமச்சீர் கல்வி முறை வந்தால் தங்களின் வணிகம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால்தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கிறார்கள். 


          எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தமிழகத்தில் எந்தவொரு மெட்ரிக் பள்ளிக்கும் அங்கீகாரம் தரக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். 1976 ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

            சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்: