சென்னை தீவுத்திடல் ராணுவக் குடியிருப்பு பகுதி அருகே சிறுவன் சுட்டுக்கொலை: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

            சென்னை தீவுத்திடல் அருகே சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            "சென்னை தீவுத்திடல் அருகே ராணுவக் குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் ஏற முயன்ற தில்ஷான் என்ற சிறுவனை ராணுவ வீரர் இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்ற செயல் அனைவரின் இதயங்களையும் உலுக்கியுள்ளது. சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

            தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 13 வயதான அந்த சிறுவன் வேலைக்கு சென்று வந்திருக்கிறான். விடுமுறை நாளில் விளையாடச் சென்றபோது இந்த கொடுமை நடந்துள்ளது. அந்த சிறுவன் தீவிரவாதி அல்ல. ராணுவக் குடியிருப்பில் நுழைவது தவறு என்று கூட அவனுக்கு தெரிந்திருக்காது. அவனை ராணுவ வீரர் சுட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மனிதநேயம் உள்ள எவரும் இதை ஏற்க மாட்டார்கள்.

              துடித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு சிகிச்சை தரவேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல் அவன் மீது இலை, தழைகளை போட்டு மூடியுள்ளனர். பாதுகாப்பு மிகுந்த ராணுவக் குடியிருப்புக்குள் ராணுவத்தினரை தவிர வேறு எவரும் இதை செய்திருக்க முடியாது. இதற்கு காரணமான ராணுவ வீரரை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்து, கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை பெற்றுத் தரவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்: