மேல்மருவத்தூர் ஆசிரியர் பரந்தாமன் இல்லத் திருமணவிழா: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு

மதுராந்தகம்:

            பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துபாக்கத்தில் ஆசிரியர் பரந்தாமன் மகள் ஓவியா-கோபிநாத் திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். 
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:-

             ஆசிரியர் பரந்தாமன் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். இன்று அவரது மகள் திருமணத்தையும் நான்தான் நடத்தி வைக்கிறேன். அந்த அளவு ஆசிரியர் பணியிலும், சமுதாய பணியிலும் அவர் மிகுந்த ஆர்வமுடன் செயல் படுகிறார்.   இந்த சமுதாயத்தில் குடிமகன்கள் அதிக அளவில் உருவாகி வருகிறார்கள்.

             பரந்தாமன் போன்று எத்தனை ஆசிரியர்கள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது. தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி குடிகார நாடு என்று பெயர் வைக்க வேண்டும். குடியால் நான்கு, ஐந்து தலைமுறைகள் சீரழிந்து வருகிறது. இதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிக்கின்றனர். அப்பா குடிகாரன் ஆகி டாஸ்மாக் கடையில் கொடுக்கும் வருமானத்தை அரசாங்கம் மகனுக்கு இலவசம் என்ற பெயரில் கொடுக்கிறது.

குடிகார நாட்டுக்கு இலவசம் தேவையா?  
 
                மத்திய அரசு 35 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கிறது. அதை தவிர்த்து இவர்கள் வேறு ஏதாவது இலவசங்கள்- நல்ல திட்டங்கள் அறிவிக்கலாம். பூரண மதுவிலக்கு அமுலுக்கு வரவேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் இருக்கக் கூடாது. அப்படி வரவேண்டும் என்றால் அதை நடத்துகிற ஆட்சி வரவேண்டும். மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.

             சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை சாராயக் கடை, சினிமா என்ற நிலையிலேயே உள்ளார்கள். சமுதாயம் திருந்த வேண்டும். இன்றைய ஆட்சியில் தலைமை செயலகத்தில் 40 செயலாளர்கள் உள்ளனர். அதில் 12 பேர் உயர் சாதியை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் மட்டுமே வன்னிய இனத்தை சேர்ந்தவர். இந்த நிலை தொடர்ந்தால் ஆடு, மாடுகள் கொடுப்பார்கள். அதனை மேய்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். மக்கள் மனம் மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

0 கருத்துகள்: