இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கண்டறிவதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

           தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறை தொடரும் என்றும், கிரீமி லேயர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத் தக்கதுதான் என்ற போதிலும், அதற்காக தமிழக அரசு கடைப்பிடிக்கும் நடைமுறை தவறு என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது.

             தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்குவதாக இருந்தால், இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலமாக இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று தெளிவாக ஆணையிட்டிருந்தது.

             இட ஒதுக்கீடு பெறும் சமுதாயத்தினரின் எண்ணிக்கையை கண்டறிவதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதுதான். ஆனால், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தாமல் தமிழக அரசிடம் ஏற்கனவே இருந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடரலாம் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

              தமிழக அரசும் அதை ஏற்றுக் கொண்டு அரசாணை வெளியிட்டிருக்கிறது.   ஆனால், தமிழக அரசின் இந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய வினா ஆகும். நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து 2007-ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், எந்த அடிப்படையில் பிற பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை முடிவு செய்தீர்கள்? என்று வினா எழுப்பியது.

              1931-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படியும் மண்டல் குழு அறிக்கையின்படியும் இந்தியாவில் 54 விழுக்காடு பிற பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக அப்போது மத்திய அரசின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அந்த இட ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின் ஓர் ஆண்டு போராடித்தான் அந்த இட ஒதுக்கீட்டை மீண்டும் பெற முடிந்தது.

             69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு வழக்கிலும் இதே வினாவை உச்சநீதிமன்றம் எழுப்பினால் அதற்கு தமிழக அரசால் என்ன பதில் கூற முடியும்? 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்ததைப்போல 69 விழுக் காட்டுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டால், தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்கு யார் பொறுப்பேற்பது? எனவே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை உணர்ந்து இப்போதாவது தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.

           சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாக மட்டும்தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். எனவே உச்சநீதிமன்றத்திடம் அவகாசம் பெற்று அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: