கடலூரில் பசுமைத் தாயகம் சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

கடலூர்:

           பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் கடலூரில் மனிதச்சங்கிலி போராட்டம்  திங்கள்கிழமை நடந்தது. 

             சாலை விபத்துக்களில் உலகில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கிறார்கள். சாலை விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். 2009-ம் ஆண்டில் இந்தியாவில் 1,26,896 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்.  மக்கள் தொகை அடிப்படையில் 1,000 இந்தியர்களில் தமிழர்கள் 57 பேர். ஆனால் சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் இந்தியர்கள் 1,000 பேரில் தமிழ்நாட்டினர் 108 பேர். 

              இதனால், தமிழகத்தில் சாலை விபத்துக்களைத் தடுக்க ஒருங்கிணைந்த தெளிவான கொள்கையும் சட்டமும், விதிமுறைகளும் தேவை. விதிமுறைகள் முழுமையாக கண்டிப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பசுமைத் தாயகம் கோரிக்கை விடுத்துள்ளது.  குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க வேண்டும். தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களிóல் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில்  கடலூரில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடந்தது. 

              திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு, கடலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். பசுமைத் தாயகம் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் செல்வராஜ், வேணு புவனேசுவரன், தர்மலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் திருமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் சாலையோரம் கைகோர்த்து நின்று, மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

0 கருத்துகள்: