பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தர்மத்தின் வாழ்வுவதன்னை ஏதுகவ்வும்: தர்மம் மறுபடியும் வெல்லக் காண்போம் என்ற பாரதியாரின் கூற்றுக்கிணங்க, தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை கிடப்பில் போட தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் முறியடித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். சமத்துவ சமுதாயம் ஏற்பட சமச்சீர்க் கல்விதான் முதல்படி என்பதால், சமச்சீர்க் கல்வியை ஏற்படுத்த பாமக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. பாமகவின் முயற்சியால் தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர்க் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், புதிதாக பதவியேற்ற அதிமுக அரசு சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக பல வழிகளிலும் முயன்றது. ஆனால் அரசு மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து, சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனினும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத தமிழக அரசு, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சாபத்திற்கு ஆளாகியுள்ளது.
சமச்சீர்க் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு கடைப்பிடித்த பிடிவாத போக்கினால், கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும், பாடம் படிக்க முடியாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் முதல் பருவத் தேர்வு நடைபெறவில்லை. செம்படம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் அதற்கு இப்போதிலிருந்தாவது பாடங்களை தொடங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்தால்கூட பரவாயில்லை. நாங்கள் எடுத்த முடிவை செயல்படுத்தியே தீருவோம் என்பதுபோல பொறுப்பற்ற வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
சமச்சீர்க் கல்வியை எதிர்த்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக கூறிவிட்டனர். எனவே மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை. ஒரு நல்ல அரசுக்கு அதன் முடிவில் பிடிவாதமாக இருப்பதைவிட, மக்கள் நலனைக் காப்பதுதான் முக்கியம். இதை உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை கைவிட்டு, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக