பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம்: பா.ம.க. ஒன்றிய செயலர் செல்வகுமார் தலைமையில் வேலி அமைத்து போராட்டம்

பரங்கிப்பேட்டை:
 
            கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக வேலி அமைக்கும் பணியை மூன்று கிராம பொதுமக்கள் தடுக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

         பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பத்தில் தனியார் அனல்மின் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், கரிக்குப்பம், வில்லியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் அனல்மின் நிலையம் வருவதற்கு பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தும் வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

             நேற்று கரிக்குப்பம், பஞ்சங்குப்பம், வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பா.ம.க., ஒன்றிய செயலர் செல்வக்குமார் தலைமையில் கரிக்குப்பம் அருகே நடந்துவரும் வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த முயன்றனர். தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனல்மின் நிலையம் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் வேலி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

             ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான கூட்டம் நடக்கும் வரை வேலி அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



0 கருத்துகள்: